ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை; 10 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் 10 ஆட்டோக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் 10 ஆட்டோக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
கொரோனா அறிகுறி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் குறையாமல் உள்ளது. தினமும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி வீடுகள்தோறும் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிய 100 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நியமிக்கப்பட்டவர்கள் வீடு, வீடாக சென்று தகவல் சேகரிக்கிறார்கள். அப்போது காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.
அவ்வாறு அறிகுறி உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக 10 ஆட்டோக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆட்டோக்கள் மூலமாக அறிகுறி உள்ளவர்களின் வீடுகளுக்கே செல்லும் சுகாதார பணியாளர்கள், அங்கு சளி மாதிரி சேகரித்து செல்கிறார்கள். கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் வெளியே செல்வதால் தொற்று பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில், வீடுகளுக்கே சென்று சளி மாதிரி எடுத்து செல்லும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
10 ஆட்டோக்கள்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 1,400 களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று அறிகுறி உடையவர்களை உடனுக்குடன் கண்டறிந்து வருகிறார்கள். அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல சற்று தயக்கம் காட்டி வந்தனர். எனவே அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்க வீடுகளுக்கே செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story