ரெம்டெசிவிர் மருந்து விற்ற வழக்கில் கைதான 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி பாகல்கோட்டை கோர்ட்டு உத்தரவு


ரெம்டெசிவிர் மருந்து விற்ற வழக்கில் கைதான 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி பாகல்கோட்டை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 9:24 PM IST (Updated: 7 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் கைதான 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பாகல்கோட்டை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாகல்கோட்டை,

கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த மாதம் (மே) 3-ந் தேதி பாகல்கோட்டை டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பாகவும், மருத்துவ மனையிலும் சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள்.

அப்போது சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 11 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் 11 பேரும் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. 11 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதான 11 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி பாகல்கோட்டை மாவட்ட கோாட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி குல்கர்னி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகும்.

அந்த மருந்தை இந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே 11 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

Next Story