கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2021 4:06 AM IST (Updated: 8 Jun 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார். 
மனுக்கள்
ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து துறை திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், அனைத்து அரசு துறை நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்தலுக்கு முன்பு பெற்ற மனுக்களை பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி மற்ற மாவட்டங்களில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ள மனுக்கள் மீது அனைத்து துறைகளின் சார்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சருக்கு        பரிந்துரை
தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திட்டங்களில் 35 திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக உள்ளது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில், நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உறவினர்கள் கூட உதவ முடியாத நிலை உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரிகள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேவையான அளவு படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த திட்டம் நிலைத்திருக்கும் வகையில், புதுமையான முறையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story