ஈரோடு மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கு
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலை இந்தியாவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதன்காரணமாக நோய் தொற்றை குறைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறிகள், பழங்கள் வாகனங்களில் பொதுமக்களின் இருப்பிடத்துக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டன.
தளர்வுகள்
இந்தநிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததால் தமிழ்நாட்டில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை காைல 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வியாபாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காய்கறி, மளிைக கடைகள் நேற்று காலை 6 மணியளவில் திறக்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், கடைகளை சுத்தப்படுத்திவிட்டு வியாபாரத்தை தொடங்கினார்கள். பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்சென்றார்கள்.
கோபி-அந்தியூர்
கோபியில் அனைத்து மளிகை , காய்கறி கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. முககவசம் அணியாமல் வந்த ஒரு சிலரை கடைக்காரர்கள் அறிவுறுத்தி அனுப்பிவைத்தார்கள்.
அந்தியூர், தவிட்டுப்பாளையம், பர்கூர், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்திருந்தார்கள். சிலர் அணியாமல் கடைகளுக்கு வந்திருந்ததை காணமுடிந்தது.
சத்தி
சத்தியமங்கலத்தில் மளிகை, உரக்கடை, பழக்கடை, இறைச்சிக்கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை 7 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கினார்கள். அதன்பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. மாலை 5 மணி அளவில் கடைகள் வெறிச்சோடியே காணப்பட்டன.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி சென்றார்கள். இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டும் திறந்து இருக்கும் என்று பொதுமக்கள் அங்கு சென்றார்கள். ஆனால் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
கொடுமுடி
கொடுமுடி மற்றும் ஊஞ்சலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் என அனைத்தும் நேற்று காலை 6 மணி முதல் திறக்கப்பட்டன. மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட்டன. ஆனால் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. காய்கறிகள், மளிகை பொருட்கள் வாகனங்களில் பொதுமக்களின் இருப்பிடத்துக்கு கொண்டு சென்று விற்கப்படுவதால் கடைகளில் கூட்டம் குறைந்திருந்தாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story