கோபி அருகே போலி டாக்டர் கைது- பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை


கோபி அருகே போலி டாக்டர் கைது- பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2021 10:37 PM GMT (Updated: 7 Jun 2021 10:37 PM GMT)

கோபி அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடத்தூர்
கோபி அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
ஆங்கில மருத்துவம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர்கள் மணிகண்டன், சுபா, ராமகிருஷ்ணன்.
இவர்கள் 3 பேரும் டாக்டருக்கு படிக்காமலேயே வீடுகளுக்கே ெசன்று பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாகவும், ஊசி, குளுக்கோஸ் போடுவதாகவும் கூகலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சையது இப்ராகிமுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுபற்றி கோபி ஆர்.டி.ஓ.வுக்கு புகார் அளித்தார். 
பிளஸ்-1 படித்தவர்
அதன்பேரில் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் அரசு டாக்டர் ராஜசேகர், சுகாதார துறை அலுவலர்கள் செல்வம், கவுரிசங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் கூகலூருக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 
இதில் மணிகண்டன் பிளஸ்-1 மட்டும் படித்துவிட்டு ஒரு டாக்டரிடம் உதவியாளராக இருந்ததும், சுபா ஓமியோபதி மருத்துவம் படித்திருந்ததும், ராமகிருஷ்ணன் ஓய்வுபெற்ற மருந்து உதவியாளர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் 3 பேரிடமும் ஆங்கில மருத்துவம் படித்ததற்கான சான்றுகள் இல்லை. 
விசாரணை
இந்தநிலையில் 3 பேரும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதுதவிர 3 பேருமே தனித்தனியாக கிளினிக்கும் நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து 3 பேரின் கிளினிக்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்கள். சுதா, ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story