ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு


ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2021 3:19 AM IST (Updated: 9 Jun 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
ஆலோசனை கூட்டம்
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அத்தியாவசிய தேவைகள் வினியோகம் ஆகியன குறித்தும், மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி குறித்தும் கேட்டறிந்தார்கள். அதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது கூறியதாவது:-
பரிசோதனை முடிவு
ஈரோடு மாவட்டத்தில் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு எடுக்கப்படும் சளி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதன்படி தொற்றின் தன்மை அதிகமாக இருந்தால் அவர்கள் ஆஸ்பத்திரியிலும், குறைவாக இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார். மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள், உணவு வினியோகம் உள்ளிட்ட வசதிகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
ஆய்வு
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக ஆணையாளர் கே.பாஸ்கரன், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செல்வராஜ், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, கே.சுப்பராயன், அந்தியூர் எஸ்.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஈரோடு திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் ரூ.51 கோடியே 59 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Next Story