ஊரடங்கால் வேலையிழந்து சத்தியில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தவித்த தொழிலாளர்கள்
கர்நாடக மாநிலம் மைசூரூ, மாண்டியா, கே,ஆர்.நகர், பெங்களூரு மற்றும் டெல்லியை சேர்ந்த 133 கூலி தொழிலாளர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி எஸ்டேட் பகுதியில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையிழந்தனர். இதனால் அவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர்களை கர்நாடகம், டெல்லிக்கு அனுப்பி வைப்பதற்காக எஸ்டேட் உரிமையாளர்கள் கடந்த 4 நாட்கள் முன்பு லாரி ஏற்பாடு செய்து அதில் தொழிலாளர்களை ஏற்றி அனுப்பினர். அந்த லாரி ஈரோடு மாவட்டம் வழியாக சென்றது. சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சென்றபோது டிரைவர், திம்பம் மலைப்பாதையில் தன்னால் லாரியை இயக்க முடியாது என்று கூறிவிட்டு அங்கேயே தொழிலாளர்களை இறக்கிவிட்டுவிட்டு் சென்றுவிட்டார். பாதி வழியில் இறக்கி விட்டதால் தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
முகாமில் தங்க வைப்பு
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் 133 பேருக்கும் உணவு வழங்கி சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தங்க வைத்தனர். பின்னர் 133 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் தாசில்தார் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாநில எல்லையான தாளவாடிக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் கர்நாடக அதிகாரிகள், கூலித்தொழிலாளர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்க முடியும் என கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து கர்நாடக தொழிலாளர்களுக்கு தாளவாடி அரசு பள்ளிக்கூடத்தில் ஒரு முகாம் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
125 பேருக்கு தொற்று இ்ல்லை
இதைத்தொடர்ந்து 133 பேருக்கும் சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வந்தது. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 125 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.
இதில் 20 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தனி வாகனத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தொற்று இல்லாத கர்நாடக தொழிலாளர்கள் 105 பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களை தனி வேனில் ஏற்றி தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன், நிலவருவாய் ஆய்வாளர் ராக்கிமுத்து, கிராமநிர்வாக அலுவலர் சதீஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் கர்நாடக எல்லை பகுதியான சிக்கொலா சோதனைச்சாவடிக்கு அழைத்து சென்றனர்.
சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
அங்கு வந்த சாம்ராஜ்நகர் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் கூலித்தொழிலாளர்களின் கொரோனா சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களை கர்நாடக மாநில அரசு பஸ் மூலம் மைசூரூ, மாண்டியா, கே.ஆர்.நகர், பெங்களூரு நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கொரோனா தொற்று உறுதியான 8 பேர் தாளவாடி சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story