புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Jun 2021 3:54 PM GMT (Updated: 9 Jun 2021 3:54 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது எரங்காட்டுப்பாளையம் காலனி. இங்கு கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படு்கிறது. இதனால்  அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி-காவிலிபாளையம் ரோட்டில் உள்ள எரங்காட்டுபாளையம் காலனி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் வினியோகிக்க கோரி...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதிக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அதிலிருந்து பொதுக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி கூறும்போது, ‘மின் மோட்டார் பழுது சரிசெய்யப்பட்டு விரைவில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த ரோட்டில் கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story