ரெயிலில் பார்சல் மூலம் மதுபாட்டில்கள் அனுப்பி வைத்த நபர்கள் கைது


ரெயிலில் பார்சல் மூலம் மதுபாட்டில்கள் அனுப்பி வைத்த நபர்கள் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 12:42 AM IST (Updated: 10 Jun 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் பார்சல் மூலம் மதுபாட்டில்கள் அனுப்பி வைத்த நபர்களை மதுரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மதுரை,ஜூன்.
வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் பார்சல் மூலம் மதுபாட்டில்கள் அனுப்பி வைத்த நபர்களை மதுரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
மதுபான கடைகள் மூடல்
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். இதற்கிடையே, அண்டை மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் மது பாட்டில்களை கடத்தி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழக ரெயில்வே போலீசார் உஷாராகினர்.
வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதை கடந்த 2 வாரங்களாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மதுரை ரெயில் நிலையத்தில் தினமும் மதுபாட்டில் கடத்தி வரும் பயணி கைது செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது.
அதன்படி, மதுரை ரெயில்வே போலீஸ் துணைசூப்பிரண்டு கருணாகரன் உத்தரவின் பேரில், வெளிமாநிலங்களில் இருந்து மதுரை வரும் ரெயில்களில் கடந்த 10 நாட்களாக தொடர் சோதனை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பார்சலில்
இதற்கிடையே, மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி அறிவுரையின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ஜெயசீலன் மற்றும் போலீசார் நேற்று மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து மதுரைக்கு 68 லிட்டர் அளவுக்கு 430 மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த பார்சலில் எலெக்ட்ரானிக் பொருள்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பார்சலை பிரித்து பார்த்த போது, மது பாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பார்சலை எடுக்க யார் வருகிறார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அங்கு சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (33 வயது), ஆண்டாள்புரம் நந்துவார் மடத்தை சேர்ந்த நல்லுச்சாமி மகன் சந்திரசேகரன் (33) ஆகியோர் பார்சலை வாங்க வந்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, மது பாட்டில்களுடன் மதுரை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story