பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை பூட்டை திறந்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு


பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை பூட்டை திறந்து ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jun 2021 12:06 AM GMT (Updated: 10 Jun 2021 12:06 AM GMT)

பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை பூட்டை திறந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை நொளம்பூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலர், கடையின் பூட்டை திறந்து உள்ளே இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக டாஸ்மாக் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் சுமதி, சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள்

அதில் மர்மநபர்கள் சிலர், ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை திறந்து உள்ளே புகுந்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை திருப்பி விட்டு, கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக திருடிச்செல்வது தெரிந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் சுமதி கொடுத்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அப்பகுதியில் உள்ள பார் உரிமையாளரான ராஜா என்பவர்தான் டாஸ்மாக் கடையின் பூட்டை திறந்து மதுபாட்டில்கள் திருடிச்சென்றது தெரிந்தது. டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் அனுமதியுடன் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story