வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி காப்பகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி காப்பகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2021 6:22 AM IST (Updated: 10 Jun 2021 6:22 AM IST)
t-max-icont-min-icon

வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி அடைந்த முதியவர், காப்பகத்தில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் சின்னக்குழந்தை 1-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான முதியோர் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரோம்பேட்டை நியூ காலனி 7-வது மெயின் ரோட்டை சேர்ந்த குமார் என்பவர் தனது அண்ணனான கோவிந்தராமன் (வயது 73) என்பவரை இந்த காப்பகத்தில் சேர்த்தார்.

நேற்று முன்தினம் இரவு கோவிந்தராமன், காப்பகத்தில் உள்ள குளியல் அறையில் தான் கட்டி இருந்த வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மகன்கள் கைவிட்டதால் விரக்தி

கோவிந்தராமனுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கணவர் மற்றும் 2 மகன்களையும் தவிக்கவிட்டு கோவிந்தராமனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. அதன்பிறகு கோவிந்தராமன் தனது 2 மகன்களையும் வளர்த்து ஆளாக்கி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

அதன்பிறகு மகன்கள் இருவரும் அவரை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் தனியாக வசித்து வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக தனியாக வசிக்க முடியாததால் தனது தம்பி குமார் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். ஆனால் அவராலும் அண்ணனை கவனிக்க முடியவில்லை என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த முதியோர் காப்பகத்தில் கோவிந்தராமனை சேர்த்து விட்டார்.

வளர்த்து ஆளாக்கிய தனது மகன்கள் இருவரும் கைவிட்டதால் வயதான காலத்தில் தன்னை கவனிக்க யாரும் இல்லாமல் முதியோர் காப்பகத்தில் வந்து தங்கி இருக்கிறோமே? என்ற மனஉளைச்சலில் இருந்த கோவிந்தராமன், சில நாட்களாக காப்பகத்தில் யாருடனும் பேசாமல் தனிமையில் அமைதியாக இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story