முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டருகே தடுப்பூசி போட ஏற்பாடு ஐகோர்ட்டில், மத்திய அரசு உறுதி


முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டருகே தடுப்பூசி போட ஏற்பாடு ஐகோர்ட்டில், மத்திய அரசு உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2021 11:49 AM IST (Updated: 10 Jun 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவது சாத்தியம் அற்றது என்றும், அவர்களுக்கு வீட்டருகே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.

மும்பை, 

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் படுக்கையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தடுப்பூசி மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது. அப்படியே சென்றாலும் அவர்கள் கால் கடுக்க காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையை தீர்க்க வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து விசாரணையின்போது மத்திய அரசு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது என கூறியது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் இதில் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியிருந்ததாவது:-

கொரோனா தடுப்பூசி வீடு, வீடாக சென்று போடுவதில் உள்ள சிக்கல் குறித்து மத்திய அரசு நிபுணர் குழுவுடன் விவாதித்தது. இதில் பங்கேற்ற அனைத்து நிபுணர்களும் இதில் உள்ள சிக்கல் மற்றும் அபாயங்கள் காரணமாக தடுப்பூசியை வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது சாத்தியமற்றது என ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சேவையை அவர்களுக்கு எட்டும் தொலையில் கொண்டு செல்வதன் மூலம் அவர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யும் அவசியம் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இதற்காக வீடுகளுக்கு அருகில் தடுப்பூசி மையத்தை கொண்டு செல்லும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு பதில் அளித்து நீதிபதிகள் கூறுகையில், “வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட முடியாததற்கு நிபுணர் குழு கூறியுள்ள காரணங்கள் மிகவும் தீவிரமானவை ஒன்றும் இல்லை. அரசு விரும்பினால் அதை கடந்து செல்ல முடியும்.

இதே பிரச்சினைகள் வீடுகளுக்கு அருகில் தடுப்பூசி மையத்தை அமைக்கும்போதும் ஏற்படக்கூடியவை தான். எனவே மத்திய அரசு தடுப்பூசிகளை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் தங்களுக்கான வழிமுறையை கண்டறிய வேண்டும். கொரோனா நமது மிகப்பெரிய எதிரி. நாம் அதை தாக்கி அழிக்க வேண்டும். எனவே அரசு அணுகுமுறை ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருக்கவேண்டும். நீங்கள் எதிரிகளின் எல்லைக்குள் சென்று எதிரிகளை துவம்சம் செய்யவேண்டும். மாறாக நீங்கள் எல்லையில் நின்று அதன் வருகைக்காக காத்திருக்கிறீர்கள்” என்றனர்.

Next Story