சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வங்கி அதிகாரி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழநாலாந்தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். அவருடைய மகன் அரவிந்தன் (வயது 30). திருவாரூர் கொடிக்கால்பாளையம், காயிதே மில்லத் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் திருவாரூரில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கீர்த்தனா (வயது 24) எம்.எஸ்.சி முடித்துள்ளார்.
அரவிந்தனுக்கும், கீர்த்தனாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அரவிந்தன் ஈரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இதனால் ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது மனைவி கீர்த்தனாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
கதவு திறக்கப்படவில்லை
நேற்று காலையில் வழக்கம்போல் அரவிந்தன் வங்கி பணிக்கு சென்று விட்டார். கீர்த்தனா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் பகல் 11 மணி அளவில் பார்சல் கொண்டு வந்த தனியார் கூரியர் நிறுவன ஊழியர் ஒருவர் அரவிந்தனின் வீட்டு கதவை வெகு நேரமாக தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதுபற்றி உடனே அக்கம்பக்கத்தினர் அரவிந்தனுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் பதறியபடி ஈரோட்டில் இருந்து வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அவர் பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது அங்கு கீர்த்தனா தொட்டில் கட்டும் கம்பியில் தூக்குமாட்டி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அரவிந்தன் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதற்கிைடயே அங்கு கீர்த்தனாவின் தந்தை வைத்தியநாதன், தாய் கலைச்செல்வி, அண்ணன் தமிழ்மணி மற்றும் உறவினர்களும் 2 கார்களில் வந்திருந்தனர். கீர்த்தனாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
கணவர் கொடுமைப்படுத்தினார்
இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது வைத்தியநாதன், ‘என் மகள் கீர்த்தனாவை அவளுடைய கணவர் அரவிந்தன் தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் அவள் மிகுந்த வேதனையுடன் இருந்தாள். கீர்த்தனாவிடம் செல்போன் இல்லாததால் நாங்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ரூ.13 ஆயிரத்துக்கு புதிய செல்போன் வாங்கி சென்னிமலைக்கு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டோம்.
அதன்பிறகு இன்று (அதாவது நேற்று) காலையில் கீர்த்தனாவுக்கு போன் செய்தேன். ஆனால் அவளது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நான் கீர்த்தனாவை திருவாரூருக்கு அழைத்து செல்ல முடிவு செய்து குடும்பத்துடன் சென்னிமலை வந்து பார்த்தபோது அவள் பிணமாக கிடக்கிறாள்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உருக்கமான கடிதம்
மேலும் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில் கீர்த்தனா எழுதி இருந்ததாவது:-
என்னோட சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னோட கணவர், மாமா, அத்தை யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட கணவர் என்னை நல்லாத்தான் பார்த்துக்கிட்டாரு. எனக்கு குழந்தை இல்லை. அதனால் எனக்கு கவலை அதிகமாகி தற்கொலை செய்துக்கிட்டேன். என் அப்பா, அண்ணா, அம்மா யாரும் காரணம் இல்லை. என் வீட்டில் என்மேல உள்ள பாசத்தில் போலீசில் புகார் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இது நான் விருப்பப்பட்டு எடுத்த முடிவு. என் புகுந்த வீட்டில யாரையும் டார்ச்சர் பண்ணக்கூடாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கீர்த்தனா எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை வைத்தியநாதன் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர், ‘எனது மருமகன் அரவிந்தன் அடிக்கடி வரதட்சணை கேட்டு எனது மகள் கீர்த்தனாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவர் தான் எனது மகள் சாவுக்கு காரணம். எனவே இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story