மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 3:42 PM GMT (Updated: 10 Jun 2021 3:42 PM GMT)

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தமிழக-கர்நாக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தமிழக-கர்நாக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள்
தமிழகத்தை ஒட்டி உள்ள கர்நாடகா, கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகள்  வனப்பகுதியையொட்டிய  போலீஸ் நிலையங்களில் திடீரென தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். 
இதையடுத்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனத்துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பு
இந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. அதிகாரிகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் இந்த சூழ்நிலையில், அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் சதி வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாகவும் உளவுத்துறை மூலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பர்கூர், வெள்ளித்திருப்பூர், பங்களாப்புதூர் பவானிசாகர் உள்பட 10 போலீஸ் நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளவாடி
மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்கவும் தமிழகம்-கர்நாடக எல்லையான ஆசனூர், தாளவாடி மற்றும் வனத்தையொட்டியுள்ள கடம்பூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்களிலும், போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பண்ணாரி சோதனை சாவடி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, அருள்வாடி, எத்திகட்டை, தலமலை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
மலை கிராமம்
மாவோயிஸ்டுகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் கர்நாடக எல்லையோர பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் எல்லையோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மலை கிராம பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story