சாராய வேட்டையின்போது நகை, பணம் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் கைது


சாராய வேட்டையின்போது நகை, பணம் திருடிய  சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 10:46 PM IST (Updated: 10 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மலைக்கிராமத்தில் சாராய வேட்டையின்போது 2 வீடுகளில் பீரோக்களை உடைத்து ரூ.8½ லட்சம், 15 பவுன் நகை திருடியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வீடுகளில் நகை, பணம் திருடிய போலீசார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதையடுத்து போலீசார் அங்கிருந்த சாராய அடுப்புகளை அடித்து உடைத்தனர். மேலும் சாராய ஊறல்களை கீழே கொட்டி அழித்தனர்.

பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று போலீசார் சோதனையிட்டனர். அப்போது பூட்டியிருந்த சில வீடுகளின் கதவின் பூட்டு மற்றும் பூரோக்களை உடைத்து சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை போலீசார் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

மலைக்கிராம மக்கள் புகார்

இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நச்சுமேடு மலைக்கிராம மக்கள் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சாராய வேட்டைக்காக மலைப்பகுதிக்கு வந்து வீடுகளின் பூட்டு, பீரோக்களை உடைத்து நகை, பணத்தை திருடிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சாராய வேட்டைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

3 பேர் கைது

அதன் அடிப்படையில் நச்சுமேடு மலைக்கிராமத்தில் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பட்டப்பகலில் பூட்டிய வீடுகளில் பீரோக்களை உடைத்து நகை, பணத்தை திருடியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது 2 பிரிவுகளில் அரியூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் தனிஇடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலையில் 3 போலீசாரும் கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். போலீசாரே வீடுபுகுந்து நகை, பணத்தை  திருடிய சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story