மரத்தில் ஆம்புலன்ஸ் மோதல்; கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர். பிரசவத்துக்கு சென்ற போது நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரசு மகன் கண்ணன்(வயது 28), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (23).
இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு, இறந்து போனது.
இந்த நிலையில் ஜெயலட்சுமி கர்ப்பமானார். இதையடுத்து அவர், அவ்வபோது புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வந்தார்.
பிரசவ வலி
நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஜெயலட்சுமியை மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதன்பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
ஆம்புலன்சில் ஜெயலட்சுமி, அவருடைய மாமியார் செல்வி(50), நாத்தனார் அம்பிகா (32) மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரான புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி மீனா ஆகியோர் ஆம்புலன்சில் ஏறி கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டனர்.
மரத்தில் மோதல்
அந்த ஆம்புலன்சை ஆரூர் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் கலியமூர்த்தி என்பவர் ஓட்டினார். ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த திருமால் மனைவி தேன்மொழி என்பவர் பணியில் இருந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர்-அரியபெருமானூர் இடையே உள்ள ஏரிக்கரை அருகில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்றபோது, ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயலட்சுமி, மீனா, கலியமூர்த்தி, தேன்மொழி ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்தவர்கள் இதுபற்றி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கர்ப்பிணி பலி
அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்தில் பலியான செல்வி, அம்பிகா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
போலீசார் விசாரணை
இதனிடையே விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story