முட்புதரில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது


முட்புதரில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்  5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 7:49 PM GMT (Updated: 10 Jun 2021 7:49 PM GMT)

மதுரை அருகே முட்புதரில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,ஜூன்.
மதுரை அருகே முட்புதரில் பதுக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்பனை
மதுரை நகரில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் திடீர்நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மேலபெருமாள் மேஸ்திரிவீதி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒருவரை பிடித்து விசாரித்த போது திடீர்நகரை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 24) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தேனியில் இருந்து கடத்தி வந்தனர்
பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் முனீஸ்வரன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை மதுரைக்கு கடத்தி வந்து அதனை போடிலைன் பகுதியில் உள்ள முட்புதருக்குள் 25 கிலோ கஞ்சாவை சாக்கு பையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றினார்கள். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருந்த முனீஸ்வரனின் நண்பர்களான திடீர்நகரை சேர்ந்த இப்ராகிம்ஷா (25), சிவபாலகிருஷ்ணன் (23), செல்லப்பாண்டி (22), சுதர்சன் (22) ஆகியோரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த நிலையில் புதூரை அடுத்த சூரியா நகர் பகுதியில் கஞ்சா விற்ற திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மதன்குமார் (21) என்பவரை திருப்பாலை போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story