பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டர்களுக்கு தகன மேடை அமைத்து நூதன போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டர்களுக்கு தகன மேடை அமைத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:51 PM IST (Updated: 11 Jun 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முத்துப்பேட்டையில் ஸ்கூட்டர்களுக்கு தகன மேடை அமைத்து நூதன போராட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை,

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பரிதவித்து வரும் இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தியும் முத்துப்பேட்டையில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை பேட்டை சாலை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி எதிரே நடந்த இந்த போராட்டத்துக்கு கட்சியின் நகர தலைவர் அகமது பாட்சா தலைமை தாங்கினார். அப்போது சுடுகாட்டில் தகன மேடை அமைப்பதுபோல ஸ்கூட்டர் மீது விறகு கட்டைகளை அடுக்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் ஹலில் ரகுமான், நகர இணை செயலாளர் மாலிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அதேபோல் முத்துப்பேட்டை தெற்கு கிளை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தெற்குத்தெருவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் தேனசினா ஜெகபர்அலி தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் அபுபக்கர்சித்திக், மாவட்ட தலைவர் தப்ரேஆலம் பாதுசா, நகர துணைத் தலைவர் சவுக்கத்அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story