கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை


கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 8:26 PM GMT (Updated: 11 Jun 2021 8:26 PM GMT)

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு நகர்ப்புறங்களுக்கு ஒதுக்குவது போல கிராமங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம்,
ஜூன்
கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு நகர்ப்புறங்களுக்கு ஒதுக்குவது போல கிராமங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஊராட்சி தலைவர்கள் கூட்டம்
திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் கொம்பாடி தங்கம், பொருளாளர் மணிராஜ், இணைச் செயலாளர்கள் வேடர்புளியங்குளம் கண்ணன், முருகன், துணைத்தலைவர்கள் வன்னிசெல்விமணி, அகிலாராணி கிளியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியஆலங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பையா வரவேற்றார். தனக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்திபாண்டி மோகன், ஒத்தஆலங்குளம் பிரபு உள்பட பலர் பேசினர்.
கிராமங்களில் அதிக பாதிப்பு
கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் சாகுல்ஹமீது பேசியதாவது:-
கொரோனா வைரஸ் 2-வது அலையானது நகர்புற பகுதியை காட்டிலும் கிராமங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் ஊராட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு உணர்வோடு அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு செயலாற்றி வருகிறோம். ஆனால் ஊராட்சிகளில் தேவைக்கு ஏற்ப நிதி இல்லை. எனவே நகர்ப்புறங்களுக்கு ஒதுக்கீடு செய்வதுபோல் கொரோனா தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளுக்கு ஊராட்சிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கான கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெறுவதற்கு அந்தந்த ஊராட்சிகளில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது போலீசாரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கலெக்டர் கையொப்பமிட்ட அடையாள அட்டைைய ஊராட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வேலை உறுதி திட்டப்பணி
இந்த நிலையில் ஆணையாளர் ஆசிக், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோரை ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் யாவையும் ஊராட்சி மன்ற தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story