ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட ஆபாச படங்கள்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை


ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட ஆபாச படங்கள்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jun 2021 10:25 PM GMT (Updated: 11 Jun 2021 10:25 PM GMT)

ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படங்கள் பகிரப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படங்கள் பகிரப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
வாட்ஸ் அப் குழு
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் சார்பில் தமிழ் மன்றம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் ஆசிரிய-ஆசிரியைகள், முன்னாள் மாணவிகள், தற்போதைய மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆன்லைன் வகுப்பு தொடர்பான தகவல்களும் குழுவில் பகிரப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் குழுவின் அட்மின்களாக உள்ள 6 பேர் மட்டுமே தகவல்களை அனுப்பும் வகையில் குழுவில் கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து 6 ஆபாச படங்கள் பகிரப்பட்டு உள்ளன. இதைப்பார்த்த மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு அவர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, மறுமுனையில் பேசியவர் பள்ளிக்கூடத்தில் பயிற்சி ஆசிரியையாக பணியாற்றியதாகவும், தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதால் ஆபாச படங்களின் பகிர்வுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விளக்கம் கேட்டு உள்ளனர். அதற்கு வாட்ஸ் அப் குழுவிற்கும், பள்ளிக்கூட நிர்வாகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், பயிற்சி ஆசிரியை பள்ளிக்கூடத்தில் பணியாற்றவில்லை என்றும் கூறி  உள்ளனர். எனவே சித்தோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் மாணவிகளின் பெற்றோரகள் புகார் அளித்து உள்ளனர். அதற்கு சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story