பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:26 PM GMT (Updated: 11 Jun 2021 10:26 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெருந்துறை
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெருந்துறை பஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சண்முகம், ராவுத்குமார், ஆண்ட முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படுவதை வலியுறுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் முன்னாள் வட்டார தலைவர் சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், நடராஜ், சக்திவேல், மணி, வேலுசாமி, திருவாச்சியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் நடராஜ், பாலு  உள்பட பலர் கலந்துகொண்டனர்
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சத்தியமங்கலம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் சி.ஆர்.ஆறுமுகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிக்கரசம்பாளையம் காங்கிரஸ்  தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பொறுப்பாளர்கள் தேவராஜ், ராமன், மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதேபோல் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் கடம்பூர் பகுதி தலைவர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாதேஷ், பொங்கியண்னண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரங்கசமுத்திரம்
சத்தியமங்கலம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரங்கசமுத்திரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.
பவானிசாகர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜி.தினேஷ் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம்  மற்றும் பொறுப்பாளர்கள் கார்த்திக், பிரசாந்த், மாணவர் அணி மதுசூதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தில் பவானிசாகர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி தலைமை தாங்கினார். பவானிசாகர் காங்கிரஸ் வட்டார தலைவர் முத்துச்சாமி, மாவட்ட துணை தலைவர் அப்பாச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு புளியம்பட்டி நகர காங்கிரஸ்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் சிக்கந்தர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் வேலப்பம் பாளையம் பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வெள்ளோட்டாம்பரப்பு பேரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.பி.வடிவேல் தலைமை தாங்கினார். இதில் வட்டார துணைத் தலைவர் கணபதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நம்பியூர்
நம்பியூர் வட்டார காங்கிரஸ்  சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நம்பியூர் கோவை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார காங்கிரஸ்  தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜவகர்பாபு, நம்பியூர் நகர தலைவர் சதிஷ்குமார், செயலாளர் மனோகர், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஷபி, மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் லோகசம்பத், கணேஷ், பிரசன்னகுமார் மற்றும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொடுமுடியில் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மொடக்குறிச்சியில் வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், சிவகிரி, ஒத்தக்கடை, கணபதிபாளையம், கருமாண்டம்பாளையம், அறச்சலூர், எழுமாத்தூர், விளக்கேத்தி, ஈங்கூர், சென்னிமலை, காஞ்சிக்கோவில், எல்லீஸ்பேட்டை உள்பட சுமார் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Next Story