ஆசனூர் அருகே வனப்பகுதி சாலையோரம் படுத்திருந்த புலி- நேரில்பார்த்த டிரைவர் அதிர்ச்சி


ஆசனூர் அருகே வனப்பகுதி சாலையோரம்  படுத்திருந்த புலி- நேரில்பார்த்த டிரைவர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 Jun 2021 10:26 PM GMT (Updated: 11 Jun 2021 10:26 PM GMT)

ஆசனூர் அருகே வனப்பகுதி ரோட்டோரத்தில் படுத்திருந்த புலியை லாரி டிரைவர் நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

தாளவாடி
ஆசனூர் அருகே வனப்பகுதி ரோட்டோரத்தில்  படுத்திருந்த புலியை லாரி டிரைவர் நேரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
ரோட்டை கடக்கும் புலி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் சிறுத்தை, புலி, யானை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் கெத்தேசால் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே புலிகள் நடமாடும் இடத்தில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கெத்தேசால் வனப்பகுதி ரோடு வாகனங்கள் இரைச்சலின்றி அமைதியாக காணப்படுகிறது. இதன் காரணமாக புலிகள், சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக ரோட்டை கடந்து செல்கின்றன.
 லாரி டிரைவர் அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று காலை கெத்தேசால் வனப்பகுதி சாலை வழியாக காய்கறிகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரத்தில் உள்ள புல்வெளியில் புலி ஒன்று ஹாயாக படுத்திருந்ததை லாரி டிரைவர் பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே லாரியை நிறுத்தினார். அப்போது புலி நீண்ட நேரமாக அங்கும், இங்குமாக படுத்து உருண்டபடி இருந்தது.
இதனை லாரியில் இருந்தபடியே டிரைவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறும்போது, ‘வாகனங்கள் செல்லாததால் தற்போது வனப்பகுதி ரோட்டோரம் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்’ என்றனர்.

Related Tags :
Next Story