ஆசனூர், பர்கூரில் வாகன சோதனை: கர்நாடக மது கடத்தி வந்த 2 பேர் கைது- சரக்கு வேன், லாரி, 879 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆசனூர், பர்கூரில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வேன், லாரி மற்றும் 879 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
ஆசனூர், பர்கூரில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வேன், லாரி மற்றும் 879 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மது கடத்தல்
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் மூலம் தமிழகத்துக்கு மது கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு மதுவை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி ஆசனூர் போலீஸ் நிலையம் முன்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறிகள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தினர்.
டிரைவர் கைது
பின்னர் லாரியை சோதனை செய்தனர். இதில் காய்கறிகளுக்கு நடுவே பெட்டிகளில் 732 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சரக்கு வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி.நகரை சேர்ந்த உதயரங்கநாதன் (வயது 21) என்பதும், தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் இதை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுவை கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டு் சென்றதும் தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 732 மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் உதயரங்கநாதனை கைது செய்தனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் அருகே பர்கூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் பொன்னையன் மற்றும் சக்திவேல் ஆகியோர் பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று பனியன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது டிரைவர் இருக்கைக்கு அடியில் உள்ள மரப்பெட்டியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 147 பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 147 மது பாட்டில்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல செய்தனர். மேலும் லாரி டிரைவர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (41), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிளீனர் சரவணக்குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story