வீடு, வீடாக சென்று ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி - பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் தகவல்
பட்டுக்கோட்டையில் வீடு, வீடாக சென்று ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கூறினார்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- பட்டுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிக்காக நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் 33 வார்டுகளிலும் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரிக்காடு பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட 2 இடங்களில் தன்னார்வலர்களால் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கபசுர குடிநீர் வினியோகம், வீடுதோறும் ஆக்சிஜன் அளவு கண்டறிதல் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.. துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் டாக்டர் உமா மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பொதுமக்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் கூறினார்.
Related Tags :
Next Story