குன்றத்தூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
குன்றத்தூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 36). அதே பகுதியிலுள்ள கல் அரைக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் தனது நண்பர் தண்டபாணி என்பவருடன் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடி வந்தனர். இதை பார்த்ததும் தனசேகர் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த காலி இடத்திற்கு இறங்கி ஓடினார். அவரது நண்பரும் இறங்கி ஓடினார். இருப்பினும் மர்மநபர்கள் தனசேகரை விடாமல் விரட்டிச்சென்று தனசேகரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் தனசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2018-ம் ஆண்டு இதே பகுதியில் முன்விரோதம் காரணமாக ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story