டெல்டா பாசனத்திற்காக கல்லணை 16-ந் தேதி திறப்பு


டெல்டா பாசனத்திற்காக கல்லணை 16-ந் தேதி திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 7:31 PM IST (Updated: 13 Jun 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 16-ந் தேதி(புதன்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்வது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் இந்த ஆண்டிற்காக நேற்று(12-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த தண்ணீர் 15-ந் தேதி இரவு அல்லது 16-ந் தேதி அதிகாலை தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 16-ந் தேதி(புதன்கிழமை) காலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட உள்ளது என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தயார் நிலை

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், டெல்டா மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டு, பூக்கள், நெல்மணிகளை தூவி கல்லணையை திறந்து வைக்கிறார்கள்.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதையொட்டி அணை கதவுகளை சுத்தம் செய்து மசகு எண்ணெய் வைக்கப்பட்டு, மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் கல்லணையில் உள்ள கரிகால்சோழன் சிலை, அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, ராஜராஜன் சிலை ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.

Next Story