மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 13 Jun 2021 11:27 PM GMT (Updated: 13 Jun 2021 11:31 PM GMT)

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசி வந்தன. இதைத்தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதற்காக 42 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. சத்தியமங்கலம் அருகே உக்கரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உக்கரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதார நிலையம் முன்பு குவிந்தனர். 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் கொடுக்கப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு்க்கொண்டனர். இதனை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ பார்வையிட்டார். அப்போது உக்கரம் ஊராட்சித் தலைவர் முருகேஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா செந்தில், அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகன வள்ளி, சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டது.

ஆண்கள், பெண்கள் என  ஏராளமானோர் அதிகாலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், சேதுபதி மற்றும் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கூட வளாகம் முழுவதும் அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி தலைமையில் கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடரும் போடப்பட்டு இருந்தது. இதையொட்டி அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம், கூகலூர் வெள்ளாங்கோவில், அளுக்குளி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியானது நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி முதலே பொதுமக்கள் வரிசையாக நின்று டோக்கனை பெற்றுக்கொண்டு, ஊசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதற்காக அதிகாலை 4 மணி முதலே பொதுமக்கள் பள்ளிக்கூட வளாகத்தில் குவிந்தனர். முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று காலை 9 மணி முதல் தடுப்பூசி போட்டு்க்கொண்டனர்.

இதேபோல் பெரியுபுலியூர், ஓடத்துறை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விண்ணப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதற்காக அதிகாலை 5.30 மணிக்கே பொதுமக்கள் வந்து டோக்கன் பெற்றுக்கொண்டனர். டோக்கன் பெற்ற 400 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர் என வட்டார மருத்துவ அலுவலர் வெங்கிடாசலம் தெரிவித்தார்.

சென்னிமலை வட்டாரத்தில் உள்ள சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பி.காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் நேற்று தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பொதுமக்கள் அதிகாலை 4 மணிக்கே இந்த மையங்களுக்கு சென்று டோக்கன் 
பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர்.

பின்னர் காலை 6 மணிக்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மையத்திலும் வரிசையில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. அதற்கு பின்னால் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தடுப்பூசி போட்ட மையங்களில் சென்னிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 400 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், டாக்டர்கள் செய்திருந்தனர்.

பெருந்துறை ஒன்றியத்தில் கருமாண்டிசெல்லிபாளையம், கம்புளியம்பட்டி, பெருந்துறை ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று ஊசி போட்டுக்கொண்டனர். இந்த 3 முகாம்களில், மொத்தம் 1,400 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதில் பெருந்துறை ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பதிலாக முதலில் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடத்துவதாக சுகாதாரத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால் அங்கு இடவசதி இல்லாததால் நேற்று முன்தினம் இ்ரவோடு இரவாக தடுப்பூசி போடும் இடத்தை அரசு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தகவல் கிடைக்காத பலர் நேற்றுக்காலை முதலில் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கே சென்றனர். அப்போது அங்கிருப்பவர்கள் கூறிய தகவலின் பேரில் அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story