அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்திவைப்பு- அமைச்சர் நாசர் தகவல்
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் கூறினார்.
பவானி
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய சங்கத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அங்கு பால் சேகரிக்கும் விதம், பால் பொருட்கள் தயாரிக்கும் முறை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தோட்டில் உள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 512 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை மூலம் தினமும் சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விலை குறைப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து வகையான பாலின் விற்பனை விலையும் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நுகர்வோர்களுக்கு விலை குறைக்கப்பட்டதற்கான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
விலை குறைப்பால் தினமும் 2 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்து தற்போது சராசரியாக 54 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஊரடங்கு தளர்த்தியவுடன் 5 ஆயிரம் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1½ கோடியாக உயர்த்த...
கடந்த ஆண்டு பால் பொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி என்று இருந்தது. தற்போது அது ரூ.1 கோடியே 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விரைவில் ரூ.1 கோடியே 50 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஒன்றியத்தில் ஏற்கனவே 500 பாலகங்கள் உள்ளது. மேலும் 15 இடங்களில் நவீன பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஈரோடு ஒன்றியத்தில் உள்ள பாலகங்களில் தயாரிக்கப்படும் நெய் கத்தார், சிங்கப்பூர், இலங்கை, துபாய், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பணம் பட்டுவாடா
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு உள்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தினமும் 150 மெட்ரிக் டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கும் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இவை லாபகரமாக இயங்க முழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை ரூ.6 கோடியே 80 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் நகரும் பாலகம் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் பால் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் பால் பாதுகாப்பாக பதப்படுத்தப்பட்டு, சுகாதாரமான முறையில் விற்கப்படுகிறது. அரசு அறிவித்ததைவிட கூடுதல் விலைக்கு பால் விற்றால், இதுகுறித்து ஆவின் நிர்வாகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவலின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத் துறையின் சார்பில் ஆவின் நிறுவனத்தில் 460 பேருக்கும், மேலும் மேலாண்மை பணியில் 170 பேருக்கும் என மொத்தம் 630 பேருக்கு பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடு
இந்த பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 630 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பணி இடங்களை மீண்டும் நிரப்ப நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் நாசருடன் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆவின் நிர்வாக இயக்குனர் நந்தகோபால் மற்றும் ஆவின் தலைமை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story