ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மக்களும் தங்களை காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால், குறிப்பிட்ட அளவே மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதன் காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நீண்ட வரிசை
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 11-ந்தேதி 13 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது. நேற்று முன்தினம், முன்கள பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகள் போடப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 42 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று ஈரோடு மாநகரில் வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி உள்ளிட்ட தடுப்பூசி போடும் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500-க்கும் மேற்பட்டோர் அதிகாலை 3 மணி முதல் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிற நோயாளிகளும் அதிகளவில் இருந்ததால், தடுப்பூசி மையம் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
டோக்கன் வினியோகம்
பின்னர் காலை 7 மணி அளவில் தடுப்பூசி போட காத்திருந்த மக்களுக்கு மாநகராட்சி, சுகாதார நிலைய அலுவலர்கள் டோக்கன் வினியோகம் செய்தனர். 200 பேருக்கு டோக்கன் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை நாளை (அதாவது இன்று) வருமாறு கூறினார்கள். இதனால் அதிகாலை முதலே காத்து நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதைத்தொடர்ந்து டோக்கன் பெற்றவர்களின் ஆதார் கார்டு எண்ணினை பதிவு செய்து, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 2-வது டோஸ் போட வந்தவர்களிடம், முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழை சரிபார்த்து 2-வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது.
ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி போடும் இடங்களில் அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் நடந்த தடுப்பூசி முகாம்களில் மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் 11 மணியுடன் தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்து, 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story