கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய 2 பேர் கைது
கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய ஆண், பெண் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை கொரட்டூர் போலீசார் நேற்று காலை அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் கைக்குழந்தையுடன் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். போலீசாரிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
மேலும் விசாரணையில் அவர்கள் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த அஷ்ரப் (வயது 38), லட்சுமி (36) என்பதும், இவர்கள்தான் 6 மாத கைக்குழந்தை மற்றும் சிறுவனுடன் சொகுசு காரில் வந்து கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் வீடுகளில் இரவு நேரங்களில் ஆடு, கோழிகளை திருடியதும் தெரிந்தது.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் இவர்கள் இருவரும் இவ்வாறு சொகுசு காரில் சென்று 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கைக்குழந்தை மற்றும் சொகுசு காரில் வந்து திருடியதும் தெரிந்தது.
இதையடு்த்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 ஆடுகள், 14 நாட்டுக்கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story