டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாகையில், பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாகையில், பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:27 AM GMT (Updated: 14 Jun 2021 11:27 AM GMT)

டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாகையில், பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட உத்தரவிட்டு வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளன. இதில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

டாஸ்மாக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பாரதீய ஜனதா சார்பில் மாவட்டங்கள் தோறும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்படி நாகை பால்பண்ணைச்சேரியில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். இதில் பாரதீய ஜனதா கட்சியினர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மருதூர்

இதேபோல வாய்ேமட்டை அடுத்த மருதூர் தெற்கு பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏரோ அழகுசுந்தரம் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணை தலைவர் சரவணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் முருகபூபதி, கிளை செயலாளர் ராமாமிர்தம் உள்பட பலர் கலந்து கொண்டு டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர்

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி காமராஜர் நகரில் மக்கள் அதிகாரம் வட்டார அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருமருகல்

திருமருகல் ஒன்றியத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கட்சி நிர்வாகிகள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் குருவாடியில் ஒன்றிய தலைவர் அனந்தகிருஷ்ணன், அரசுத்தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சன்னாநல்லூர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் பனங்குடி வைத்தியநாதன், ஒன்றிய செயலாளர் நரிமணம் ராஜேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கொந்தகை பாலு, பனங்குடி சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் பாரதீய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story