கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,397 பேர் குணம் அடைந்துள்ளனர்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,397 பேர் குணம் அடைந்துள்ளனர்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:14 PM GMT (Updated: 14 Jun 2021 10:14 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 397 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 397 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறி உள்ளார்.
400 படுக்கைகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக உள்ளது. இங்கு ஏற்கனவே 550 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இருந்தன.
தற்போது மேலும் 400 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி ரோட்டரி சங்கம் மூலம் நடக்கிறது. இதுபோல் 200 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தொடக்கம் முதல் இதுவரை (நேற்று முன்தினம் வரை) 76 ஆயிரத்து 260 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இதில் 64 ஆயிரத்து 397 பேர் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 11 ஆயிரத்து 371 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 515 பேர் வீட்டு தனிமையில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 123 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் மட்டும் 686 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பூசி 2 லட்சத்து 55 ஆயிரத்து 89 பேருக்கு போடப்பட்டு உள்ளது.
பரிசோதனை
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக 932 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 608 படுக்கைகள் இருக்கின்றன. இதுபோல் கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தயாராக உள்ள படுக்கைகளையும் சேர்த்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 2 ஆயிரத்து 19 படுக்கைகள் உள்ளன. இதில் 1,281 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்சிஜன் படுக்கைகளில் 962 பேரும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் 189 பேரும் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 120 பேரும் இருக்கிறார்கள். மொத்தம் 461 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவை தவிர 18 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என 6 ஆயிரத்து 19 படுக்கைகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 224 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு 2 ஆயிரத்து 476 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஆய்வின்போது அ.கணேசமூர்த்தி எம்.பி., அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story