ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு மட்டும் நேற்று நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான பதிவு மட்டும் நேற்று நடந்தது.
பொதுத்தேர்வு ரத்து
கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதி தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
மாணவர் சேர்க்கை
அதைப்போல் பிளஸ்-1 சேர்க்கைக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி தேர்வும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-1 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான சேர்க்கை தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும், கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேற்று காலை வந்திருந்தனர்.
பதிவு
இதேபோல் மாணவ-மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் வந்திருந்தனர். பள்ளிக்கூடத்தின் நுழைவுவாயிலில் அவர்கள் கையில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். மேலும் அவர்களுக்குப் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் இருக்கைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையில் தமிழக அரசு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கை நடத்தக்கூடாது என்று திடீரென அறிவித்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், பிளஸ்-1 சேர்வதற்காக வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் அவர்களுடைய பெயர், செல்போன் எண், எந்த பாடப்பிரிவில் படிக்க விரும்புகிறீர்கள் போன்ற விவரங்களை மட்டும் பதிவு செய்து கொண்டு அனுப்பினர். இதனால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
Related Tags :
Next Story