சித்த மருத்துவம் மூலம் 1,038 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்- அதிகாரி தகவல்


சித்த மருத்துவம் மூலம் 1,038 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்- அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2021 4:39 AM IST (Updated: 15 Jun 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதித்த 1,038 பேர் சித்த மருத்துவம் மூலம் குணம் அடைந்து உள்ளனர் என்று மாவட்ட சித்தா அலுவலர் செல்வமூர்த்தி கூறினார்.

சேலம்:
கொரோனா வைரஸ் பாதித்த 1,038 பேர் சித்த மருத்துவம் மூலம் குணம் அடைந்து உள்ளனர் என்று மாவட்ட சித்தா அலுவலர் செல்வமூர்த்தி கூறினார்.
கொரோனா வைரஸ்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டத்தில் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியிலும் வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
சித்த மருத்துவ முறை
தொற்று பாதித்தவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அங்கு முதல் கட்டமாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2-ம் கட்டமாக 100 படுக்கைகள், 3-ம் கட்டமாக 20 படுக்கைகள் என தற்போது அந்த சிறப்பு மையத்தில் 220 படுக்கை வசதிகள் உள்ளன.
இந்த நிலையில் வைரஸ் பாதித்து சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று பலர் வீடு திரும்பி உள்ளனர்.
1,038 பேர்
இது குறித்து சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமூர்த்தியிடம் கேட்டபோது,‘கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி சித்தா பிரிவு தொடங்கப்பட்டது. இதுவரை 1,200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுவரை அதாவது 14-ந்தேதி வரை மொத்தம் 1,038 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீட்டிற்கு சென்று உள்ளனர். தற்போது 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்த மையத்தில் தற்போது 147 படுக்கைகள் காலியாக உள்ளன’ என்றார்.

Next Story