புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்


புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது- நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:48 AM IST (Updated: 15 Jun 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நம்பியூர் அருகே 130 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.
சாராயம் விற்றவர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் விற்பனை செய்வதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் மாதம்பாளையம் ஊராட்சி கண்ணப்பர் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது29) என்பதும், பனியன் நிறுவன தொழிலாளியான இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் சாராயம் விற்று வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சாராய ஊறல் பறிமுதல்
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் பழத்தோட்ட பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக புஞ்சைபுளியம்பட்டி தனி பிரிவு போலீஸ் சதாசிவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்ட போது சாராயம் காய்ச்சுவதற்காக ஒரு பேரலில் 50 லிட்டர் ஊறல் போட்டு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து (26) என்பதும், அவர் சாராயம் காய்ச்சி விற்று வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம், சோளகாடு ஆகிய பகுதிகளில் சாராய ஊறல் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்பிரிவு போலீசார், மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஈச்சிகாடு பகுதியில் சீனிவாசன் என்பவர் தனது ஆட்டுபட்டியில் உள்ள பிளாஸ்டிக் குடத்தில் 130 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
போலீசார் வருவதை அறிந்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவர் வைத்திருந்த 130 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

Related Tags :
Next Story