ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை பெண் ஊழியர்கள் திடீர் போராட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு வழங்க கோரி ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை பெண் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் ஆடைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 450-க்கும் மேற்பட்டோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா முதல் அலையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அப்போது வழங்கப்பட்ட சம்பளத் தொகையை தற்போது வரை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து மீதம் வழங்குவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்தும், நேற்று திடீரென பணியை புறக்கணித்த பெண் ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒரகடம் போலீசர் சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து, ஊழியர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர்.
Related Tags :
Next Story