திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை
திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? என்று மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதா? என்று மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு சோதனை
சென்னை சென்டிரல் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்த 2 ரெயில் நிலையங்களிலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனினும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.
அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் போலீஸ் படையினர் மோப்பநாய் லீமா, மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் என்ஜின்கள்
டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம், பார்சல் சேவை பிரிவு, 6 நடைமேடைகள், நடைமேடை மேம்பாலம் மற்றும் படிக்கட்டுகள், லிப்டுகள், ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து தண்டவாளங்களும் சோதனையிடப்பட்டன.
இதையடுத்து ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் வைத்திருந்த பைகள், ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த என்ஜின்களையும் போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பழனி
இதேபோல் பழனி ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் இடம், அனைத்து நடைமேடைகள் மற்றும் தண்டவாளங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டனர்.
இதேபோல் கொடைரோடு ரெயில் நிலையத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சுந்தரகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மோப்பநாய் மூலம் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி ரெயில்நிலைய நடைேமடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கொடைரோட்டில் நின்று செல்லும் ரெயில்களிலும் மோப்பநாய் மூலம் சோதனை நடந்தது. பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
Related Tags :
Next Story