வெல்டிங் தொழிலாளி குத்திக்கொலை
மதுரையில் மது போதை தகராறில் வெல்டிங் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
மதுரை
மதுரையில் மது போதை தகராறில் வெல்டிங் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வெல்டிங் தொழிலாளி
மதுரை சின்ன அனுப்பானடி, ஓம் முருகா 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த அபிராபி (24) என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துக்குமார் கீரைத்துறை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை.
பிணமாக கிடந்தார்
இதனால் பதறிப்போன அபிராமி தனது மாமனார், மாமியாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் சிந்தாமணி அனுப்பானடி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அது குறித்து விசாரித்த போது அந்த மோட்டார்சைக்கிள் முத்துக்குமாருடையது என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அங்கு தேடியபோது முட்புதருக்குள் தலையில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் இறந்து கிடந்தார். அதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
மேலும் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், முத்துக்குமார் தன்னுடன் வேலை பார்த்த 3 பேருடன் சென்றது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்திய போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story