ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்


ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Jun 2021 10:08 PM GMT (Updated: 15 Jun 2021 10:08 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. 
தடுப்பூசி தட்டுப்பாடு
கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். இதற்காக எங்கெங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்று அறிந்து கொண்டு அங்கு தினமும் மக்கள் படை எடுத்து வருகிறார்கள். ஆனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே தடுப்பூசி வரப்பெற்றதும் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்துக்கு 13 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் வரப்பெற்றன. இதன் காரணமாக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அங்கு அதிகாலை 3 மணிக்கே பொதுமக்கள் வந்து காத்திருந்ததையும் காணமுடிந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தாலும், ஒதுக்கப்பட்டு இருந்த அளவை பொறுத்து 150 முதல் 400 பேர் வரை ஒவ்வொரு முகாமிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன.
பணி நிறுத்தம்
காலை 8 மணிக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் அதிகாலையிலேயே கூடியதால் காலை 8 மணிக்குள் தடுப்பூசிகள் போடப்பட்டது. ஓரிரு நாட்களில் இருப்பு தீர்ந்துவிட்டதால் நேற்று முதல் தடுப்பூசிகள் போடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூகள் மக்களுக்கு போடப்பட்டுவிட்டன. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளன. எனவே தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசிகள் ஒதுக்கீடு வந்ததும் முறையாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு மீண்டும் தடுப்பூசிகள் போடப்படும். இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story