டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு- இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் தகவல்
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து வருகிற 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதாக இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.
ஈரோடு
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து வருகிற 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவதாக இந்திய மருத்துவ சங்க துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.
தேசிய எதிர்ப்பு தினம்
இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவின் 2 அலைகளிலும் தேசிய அளவில் 1,400 டாக்டர்கள், செவிலியர்கள் இறந்து உள்ளனர். கொரோனா தொற்று பரவி வரும் நிலையிலும் மக்களை காக்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது சமீப காலமாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. அசாம், உத்தர பிரதேசம், மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்து உள்ளது. 18 மாநிலங்களில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. இதனை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும்.
சில ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டணம் பெறுவதாகவும், வேறு சில பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நடந்து இருந்தால் மாவட்ட நிர்வாகம், போலீசார், சுகாதாரத்துறையினரிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு செயல்படாமல் தாக்குதல் நடத்துவது அபாயகரமானது. எனவே வருகிற 18-ந் தேதி தேசிய எதிர்ப்பு தினமாக கடைபிடித்து “காப்போரை காப்போம்” என்ற தலைப்பில் டாக்டர்கள் கறுப்பு பட்டை அணிந்து பணி செய்வது என்று முடிவு செய்து உள்ளோம்.
தடுப்பூசி
கொரோனா 2-வது அலை மோசமான நிலையில் உள்ளதால் ஊரடங்கு அவசியமாகிறது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், 3-வது அலை மிக மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. இது வேகமாக பரவும் அபாயம் இருந்தாலும், தற்போது பரவல் குறைவாக காணப்படுகிறது.
எனவே கண் எரிச்சல், முகத்தில் வலி, சைனஸ் தொந்தரவு, சளி போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் உயிரை காப்பாற்றிவிடலாம்.
அரசு மூலமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 75 சதவீதம் அரசுக்கும், 25 சதவீதம் தனியாருக்கும் வழங்க வாய்ப்புள்ளது. எனவே அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் சி.என்.ராஜா கூறினார்.
அப்போது டாக்டர்கள் சுகுமார், அபுல்ஹசன், சுதாகர், மாதவன், பிரசாத், செந்தில்வேல், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story