கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்த்தி வழங்க வேண்டும்; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை


கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்த்தி வழங்க வேண்டும்; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2021 10:13 PM GMT (Updated: 15 Jun 2021 10:13 PM GMT)

கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீத கூலியை உயர்த்தி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னிமலை
கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீத கூலியை உயர்த்தி வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு
ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவர் கே.எஸ்.பி.ராஜேந்திரன், செயலாளர் டி.எம்.சுப்பிரமணியன், பொருளாளர் பி.கோபி ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக அளவில் 1,500 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட அளவில் சுமார் 250 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரடியாக 3 லட்சம் குடும்பங்களும், மறைமுகமாக 2 லட்சம் குடும்பங்களும் பயன்பெற்று வருகின்றன.
கூலி உயர்வு
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் கைத்தறி நெசவாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்தாலும் தினமும் ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் பெறுவதே இயலாத செயலாகும்.
அதனால் கீழ்கண்ட கோரிக்கைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் இருந்து 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் 
* கைத்தறி துணி விற்பனைக்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை  அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடி மானியத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். 
ஓய்வூதியம்
* தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி மத்திய கூட்டுறவு வங்கியில் பெறப்படும் கடனுக்கான வட்டியை குறைக்க ஆவண செய்ய வேண்டும். 
* நெசவாளர் ஓய்வூதியத்தை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 
* நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தற்சமயம் எவ்வித பயனும் வழங்கப்படுவதில்லை. அதனால் நெசவாளர்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story