ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள்: 10.22 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பணி- கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
சேலம் மாவட்டத்தில் 10.22 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 10.22 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
நிவாரண உதவித்தொகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணத்தொகையாக மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி தொடக்க விழா சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரில் உள்ள பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடியில் நடைபெற்றது. இதற்கு பார்த்திபன் எம்.பி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கி, தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை வாங்கிச்சென்றனர்.
10.22 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்
இதைத்தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1,591 ரேஷன் கடைகளில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 699 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 327 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.204 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
தொற்று காலத்தில் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்பதற்காக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். மக்கள் ஆர்வமாக பெற்றுக்கொண்டு செல்கிறார்கள்.
முககவசம் அணியவேண்டும்
ஒரு ரேஷன் கடையில் காலையில் 50 பேருக்கும், மாலையில் 50 பேருக்கும் என ஒருநாளைக்கு 100 பேருக்கு வழங்கப்படும். பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தினமும் 1,500 பேர் பாதிப்பு என்ற நிலை இருந்தது. தற்போது 800-க்கு கீழ் குறைந்து உள்ளது. இதன் மூலம் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது
படுக்கை வசதிகள்
மாவட்டத்தில் ஒருவர் கூட தொற்றால் பாதிக்கவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வைரஸ் பாதிப்பவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தற்போது பல படுக்கைகள் காலியாக உள்ளன. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
14 வகையான பொருட்கள்
14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு அடங்கிய பையில், கோதுமை, உப்பு, ரவை தலா ஒரு கிலோ வீதமும் மற்றும் சர்க்கரை, உளுந்தம் பருப்பு தலா 500 கிராம், புளி, கடலைப்பருப்பு, டீத்தூள் தலா 100 கிராம், கடுகு, சீரகம், மஞ்சள், மிளகாய்த்தூள் தலா 100 கிராம் மற்றும் குளியல் சோப்பு, துணி சோப்பு ஒவ்வொன்றும் என மொத்தம் 14 மளிகை பொருட்கள் அடங்கி உள்ளன.
சேலத்தில் நடந்த விழாவில் கூட்டுறவுத்துறை மாவட்ட இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், பொன்னி கூட்டுறவு அங்காடி மேலாண்மை இயக்குனர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story