ஒரகடம் அருகே சாலை அமைக்கும் பணியில் தகராறு; 3 பேர் கைது


ஒரகடம் அருகே சாலை அமைக்கும் பணியில் தகராறு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 6:09 AM GMT (Updated: 2021-06-16T11:39:35+05:30)

ஒரகடம் அருகே சாலை அமைக்கும் பணியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவர் எறையூர் பகுதியில் உள்ள சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார். தற்போது பணி நடைபெற்று வரும் நிலையில் அதே எறையூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (29), விஜயகுமார் (32), உதயகுமார் (30) ஆகியோர் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து செய்வோம் என்று சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாலை பணி சம்பந்தமாக பேசுவதற்கு சக்திவேலை தொலைபேசியில் எதிர்தரப்பினர் அழைத்துள்ளனர்.

அதன் பேரில் சக்திவேல் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றார். அவருடன் எறையூர் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (30), முருகன் (35), ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அங்கு சரத்குமாருடன் இருந்த ரமேஷ்(41), அன்பரசன் ஆகியோருக்கும் சக்திவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாறியது.

இதனை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேல், சிவலிங்கம், முருகன் ஆகியோரை முகம், மார்பு, கை, உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த நிலையில் இருந்த முருகனை மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், சக்திவேல், மற்றும் சிவலிங்கத்தை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், ரமேஷ், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story