கந்து வட்டி சட்டத்தின் கீழ் 4 பேர் கைது


கந்து வட்டி சட்டத்தின் கீழ் 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 7:27 PM GMT (Updated: 16 Jun 2021 7:27 PM GMT)

வாலிபர் வீடியோ வெளியிட்டு விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்

மதுரை
வாலிபர் வீடியோ வெளியிட்டு விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
கந்துவட்டி
மதுரை மகபூப்பாளையம், அன்சாரி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் முகமதுஅலி(வயது 37). இவரது மனைவி பாத்திமா(33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவி வீட்டிலேயே மாவு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கு முன்பு முகமதுஅலி ஓட்டல் வைத்து நடத்தி வந்தார்.. அப்போது ஓட்டலை விரிவுப்படுத்துவதற்காக ஜெயந்திரசிங், மாரிமுத்து, காமாட்சி ஆகியோரிடம் செல்வகுமார் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதற்கு கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். எனவே முகமது அலி ஓட்டலை மூடிவிட்டு மனைவியுடன் சேர்ந்து தொழில் செய்ய தொடங்கியுள்ளார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் செல்போனில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னிடம் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்த செல்வகுமார், ஜெயந்திரசிங், மாரிமுத்து, காமாட்சி ஆகியோர் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிக்கு எனது இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார், கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோரிப்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார், ஜெய்ஹிந்த்புரம் ஜெயந்திரசிங், வில்லாபும் மாரிமுத்து, கோச்சடை காமாட்சி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முகமது அலி தங்களிடம் பணம் வாங்கியதற்கான ஆவணங்களை கொடுத்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அப்போது முகமதுஅலி குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் நாங்கள் அவரிடம் பணம் கேட்டோம் என்று கூறினார்கள். மேலும் அவரை பற்றியே அவரது குடும்பத்தை பற்றியே தவறாக பேசவில்லை. கந்த வட்டியும் வசூலிக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story