ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள்- மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது
ஈரோடு மாவட்டத்துக்கு 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்துக்கு 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இருப்பு இல்லாததால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஈரோடு மாவட்டத்துக்கு 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வரப்பெற்றன.
இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் நேற்று தொடங்கியது. ஆனால் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அதிகாலையிலேயே முகாம்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அங்கு தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்றும், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகவும் என்று எழுதி வைக்கப்பட்டு இருந்தனர். அதேசமயம் மாநகராட்சி பகுதியை தவிர மற்ற இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன. எனவே அந்த பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டு சென்றார்கள்.
3 ஆயிரம் தடுப்பூசிகள்
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. அதன்படி ஈரோடு வளையக்கார வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடம், பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடம், திருநகர்காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடம், கருங்கல்பாளையம் ்ராஜாஜிபுரம் காமராஜ் மேல்நிலை பள்ளிக்கூடம், பன்னீர்செல்வம் பூங்கா அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், பழையபாளையம் தொடக்க பள்ளிக்கூடம், ஜவுளிநகர் தொடக்க பள்ளிக்கூடம், பெரியசேமூர் ஈ.பி.பி. நகர் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடம், சாஸ்திரி நகர் நேதாஜிரோடு ரீட்டா பள்ளிக்கூடம் ஆகிய 10 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.
இதுகுறித்து மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளுக்கு ஏற்ப மாநகர, நகர, ஊரக பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிக்காக 3 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது”, என்றனர்.
Related Tags :
Next Story