ஈரோடு மாவட்ட 34-வது கலெக்டராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றார்- கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை என்று பேட்டி
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக பொறுப்பு ஏற்ற புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக பொறுப்பு ஏற்ற புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக கூறினார்.
புதிய கலெக்டா்
ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று காலை பொறுப்பு ஏற்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் வரவேற்று, கலெக்டரின் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு கோப்புகளில் கையொப்பமிட்டு ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக எச்.கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நான் கலெக்டராக பணியாற்றும் 2-வது மாவட்டம் இதுவாகும். இங்கு ஏற்கனவே கோபி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் அரசின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட இருக்கிறேன். அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சரியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தடுப்பூசி அல்லது கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு
அரசின் வழிகாட்டுதலின் படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்ட பலன்கள் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் காப்பீட்டு திட்டம் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படுவதை உறுதி செய்து, தகுதியானவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் சார்ந்த பிரச்சினைகளும் இனி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். நான் புதிதாக பொறுப்பு ஏற்று இருப்பதால், ஒவ்வொரு துறைகளைப்பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு சிறந்த நிர்வாகம் அமைய நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.பிரதிக் தயாள் ஆகியோர் இருந்தனர்.
வாழ்த்து
புதிதாக பொறுப்பு ஏற்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட பயிற்சி கலெக்டராக இருந்தார். 2014-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி சப்-கலெக்டராக பொறுப்பு ஏற்ற அவர் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2017-ம் ஆண்டு தமிழக அரசின் நிதித்துறை துணை செயலாளர் பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற அவர் நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 22-2-2021 அன்று தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து பணியிட மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் சப்-கலெக்டராக பதவி வகித்து, ஈரோடு மாவட்ட கலெக்டராக உயர்ந்து உள்ளார் என்பதும் ஈரோடு மாவட்டத்தின் 26-வது கலெக்டர் டாக்டர் ஆனந்தகுமாருக்கு பின்னர், கலெக்டராக பதவி ஏற்ற நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணனுண்ணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story