திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருக்கும் இந்த பாதையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. குறைந்த அளவு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது.
லாரி பழுதானது
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிக்கு மஞ்சள் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது.
நேற்று காலை 10 மணியளவில் 8-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் எதுவும் இருபுறமும் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்களை ஆசனூரிலும், தமிழ்நாட்டு வாகனங்களை பண்ணாரி சோதனை சாவடியிலும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது. அதன்பிறகே லாரி புறப்பட்டுசென்றது. எனினும் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story