கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தப்பி ஓடிய தொழிற்சாலை தொழிலாளர்கள்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு ஒடிசாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 14-ந் தேதி உறுதியானது. இந்த தகவல் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த அவர்கள் 11 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுபற்றி உரிமம் ஆய்வாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 11 கொரோனா நோயாளிகளை தேடிவந்தனர்.இந்தநிலையில் தொழிற்சாலை உரிமையாளர் தாமோதரன், கொரோனா உறுதியான 3 பேரை மட்டும் பிடித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மற்ற 8 பேர் அருகில் உள்ள மற்ற கம்பெனிகளில் வேலை செய்கிறார்களா? அல்லது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு தப்பிச் சென்றார்களா? என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ‘சீல்’ வைக்கப்பட்ட அந்த தொழிற்சாலை நேற்று முதல் திறக்கப்பட்டு மற்ற ஊழியர்கள் மூலம் இயக்கப்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த அங்குள்ள மற்ற தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story