மாற்று ஏற்பாடு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்கள்


மாற்று ஏற்பாடு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 8:53 PM IST (Updated: 17 Jun 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்களின் சிரமத்தை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்களின் சிரமத்தை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கையில் மாநில அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. கடந்த பல வாரங்களாக தினசரி தொற்று 1000-க்கும் மேலாகவே உள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் போட பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஊசிகள் போடப்பட்டு வந்தன. தொடக்கத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊசி போடப்பட்டது. ஆனால் தற்போது ஆங்காங்கே ஆரம்ப சுகாதார நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பள்ளிக்கூடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இது மக்களுக்கு தடுப்பூசி மையங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் வந்து செல்லவும் வசதியாக இருக்கிறது. ஆனால் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதால் தினசரி நெரிசல் அதிகமாகி வருகிறது.
கூட்ட நெரிசல்
நேற்று திருநகர் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் சாலையில் காத்து இருந்தனர். ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் டோக்கன் பெற்றவர்கள் மட்டும் அமர்ந்து கொள்ள இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.
இதுபோல் அனைத்து மையங்களிலும் தினசரி போலீஸ் காவலுடன் டோக்கன்கள் வழங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தடுப்பூசி போடுவதன் நோக்கமே கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காகவே ஊரடங்கு போடப்பட்டு மக்கள் கூடுவது தடுக்கப்படுகிறது. ஆனால் தடுப்பூசியின் பெயரால் தினசரி ஈரோடு மாநகராட்சியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தலா 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள்.
நேற்று தடுப்பூசி போட வரிசையில் நின்ற ஒருவர் கூறும்போது, அதிகாலை 2 மணிக்கே வந்து விட்டேன் என்றார். இன்னொருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கே வந்து இடம் பிடித்து வைத்து விட்டு, பின்னர் அதிகாலையில் வந்து விட்டேன் என்றார். இதே நிலை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. அடித்துப்பிடித்து ஊசி போட்டவர்களும் பல நாட்கள், பல மணி நேரம் காத்து இருந்துதான் ஊசிபோட வேண்டியது உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதன் மூலம் தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆர்வம்
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
தடுப்பூசி போடுவது இன்றைய அத்தியாவசிய கடமை ஆகி விட்டது. உயிர் பயம் என்பதையும் தாண்டி, ஊரடங்கு முடிந்ததும் தொழில்கள், வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட தடுப்பூசி அவசியம் என்ற நிலை வந்து விட்டது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போட மிகவும் ஆர்வமாக வருகிறார்கள். இது ஒரு கட்டாயத்தின் பேரில் இருந்தாலும் அவசியமாக தடுப்பூசி போட வேண்டியது உள்ளது. ஆனால் பரவலாக எங்கும் தடுப்பூசி கிடைக்காததால் குறிப்பிட்ட மையங்களை தேடி அதிகம்பேர் வருகிறார்கள்.
தினமும் காலையில் எழுந்ததும் நாளை எங்கே தடுப்பூசி என்று தேடித்தேடி இருப்பவர்கள் ஏராளம் உள்ளனர். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் தடுப்பூசி குறித்த தகவல் தெரியுமா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 
வார்டு
இதை தடுக்க, வார்டு வாரியாக தினசரி தடுப்பூசி போடும் முடிவினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டு வாரியாக கணக்கெடுத்து ஊசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டால் விரைவாக போடவும் முடியும். பொதுமக்கள் வீணாக அலைவதை தடுக்கவும் முடியும். ஏற்கனவே காய்ச்சல்-சளி பரிசோதனை செய்ய தினசரி களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வருகிறார்கள். அவர்கள் சேகரித்து உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஊசி போடுவது மற்றும் மக்களுக்கு டோக்கன் வழங்குவது எளிது.
எனவே தினசரி வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளுக்கு களப்பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டால் டோக்கன் பெற்றவர்கள் தவிர வேறு யாரும் தேவையின்றி தடுப்பூசி மையங்களுக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. பொதுமக்களும் வீடு தேடி டோக்கன் வரும் என்ற நம்பிக்கையில் காத்து இருப்பார்கள். இதன் மூலம் தடுப்பூசி போடும் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அழுத்தமின்றி பணியையும் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------


Next Story