பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கவசஉடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற கலெக்டர் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்


பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கவசஉடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற கலெக்டர் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 17 Jun 2021 9:15 PM IST (Updated: 17 Jun 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதுடன்,  சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக உள்ளது. இங்கு அமைச்சர் சு.முத்துசாமியின் தீவிர நடவடிக்கையால் ஏராளமான புதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தனியார் பங்களிப்புடன் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சுமார் 600 படுக்கை வசதிகள் செய்வதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இங்கு ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் பெருந்துறை மருத்துவக்கல்லூரியின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மொத்த படுக்கை வசதிகள், இதுவரை சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை உள்ளிட்டவற்றை அவர் கேட்டு அறிந்தார். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி இருப்பதையும் அவர் உறுதி செய்தார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு கலன்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிதாக அமைக்கப்பட்டு, கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் வளாகம், நன்கொடையாளர்கள் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டார்.
கவச உடை
கொரோனா சளி மாதிரி பரிசோதனை மையத்துக்கு சென்ற அவர் தினசரி பரிசோதனை விவரங்களையும் கேட்டு அறிந்ததுடன், பொதுமக்களுக்கு துரிதமாக பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதையும் அவர் பார்வையிட்டு உறுதி செய்தார்.
அப்போது கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும் ஒரு பகுதிக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்ளே சென்று நோயாளிகளை சந்திக்க ஆர்வமாக இருந்தார். உடனடியாக அவருக்கு பாதுகாப்பு கவச உடை அணிவிக்கப்பட்டது. உடன் வந்த அதிகாரிகளும் கவச உடை அணிந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து வார்டுக்கு உள்ளே சென்ற கலெக்டர், அங்கு கொரோனா பாதித்து நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் திருப்தியாக உள்ளனவா? என்றும் அவர் கேட்டார். 10 நிமிடங்களுக்கு மேலாக அவர் ஒவ்வொருவராக சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கொரோனா வார்டு
இதேபோல் கொரோனா நோயாளிகளின் உறவினர்களை சந்தித்து பேசிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோயாளிகளை டாக்டர்கள் கனிவுடன் பார்த்து கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், நோயாளிகளுக்கு கொண்டு வரும் உணவு பொருட்களை செவிலியர்கள் அல்லது பணியாளர்களிடம் ஒப்படைத்தால், அவர்களே சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் வழங்கி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆய்வின்போது பெருந்துறை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் கவச உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை பார்வையிட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுடன் பேசி, பொதுமக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

Next Story